< Back
உலக செய்திகள்
ஈரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யார்? தாக்குதல் நடத்தியது இஸ்ரேலா? - முழு விவரம்
உலக செய்திகள்

ஈரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யார்? தாக்குதல் நடத்தியது இஸ்ரேலா? - முழு விவரம்

தினத்தந்தி
|
31 July 2024 2:35 PM IST

ஈரானில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் கொல்லப்பட்டார்.

தெஹ்ரான்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.

ஆனால், 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (வயது 62) இன்று கொல்லப்பட்டார். ஈரான் தலைநகரில் உள்ள வீட்டில் இஸ்மாயில் இன்று படுகொலை செய்யப்பட்டார். இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது உதவியாளரும் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹனியி ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார்.

இஸ்மாயில் ஹனியியை கொலை செய்தது யார் என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், இஸ்ரேல்தான் இஸ்மாயிலை கொலை செய்ததாக ஹமாஸ் ஆயுதக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. அதேபோல், ஈரான், துருக்கி, கத்தார் போன்ற நாடுகளும் இஸ்ரேலை குற்றஞ்சாட்டி வருகின்றன.

யார் இந்த இஸ்மாயில் ஹனியி:-

1963ம் ஆண்டு எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காசா முனையில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்மாயில் ஹனியி பிறந்தார். இவர் ஹமாஸ் ஆயுதக்குழுவை தொடங்கிய ஷேக் அகமது யாசின் என்பவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.

இஸ்ரேல் சிறையில் இஸ்மாயில்:

பல்வேறு குற்றங்களுக்காக இஸ்மாயில் 3 ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டார். 1988ம் ஆண்டு சுமார் 6 மாதங்கள் இஸ்ரேல் சிறையில் இருந்தார். பின்னர், 1989ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து விடுதலை, ஹமாசில் சேர்ந்தார்

இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலையான இஸ்மாயில் ஹமாஸ் ஆயுதக்குழுவில் சேர்ந்தார். பின்னர், லெபனான் சென்ற இஸ்மாயில் அங்கிருந்தவாறு ஹமாஸ் ஆதரவு மற்றும் இஸ்ரேல் நடவடிக்கையில் இறங்கினார்.

காசா திரும்பினார்

லெபனானில் இருந்த இஸ்மாயில் பின்னர் 1993ம் ஆண்டில் மீண்டும் காசா திரும்பினார். காசாவில் இருந்தவாறு ஹமாஸ் ஆயுதக்குழுவை பலப்படுத்தும் வேலையில் இறங்கினார்.

பிரதமர்:

2006ம் ஆண்டு பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் ஆயுதக்குழு வெற்றிபெற்றதையடுத்து இஸ்மாயில் பாலஸ்தீன பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2007ம் ஆண்டே இஸ்மாயிலை பாலஸ்தீனத்தின் பிரதமர் பதவியில் இருந்து அதிபர் முகமது அப்பாஸ் டிஸ்மிஸ் செய்தார்.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர்:

பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இஸ்மாயில் 2017ம் ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவரானார்.

இஸ்ரேல் மீது தாக்குதல்:-

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் இஸ்மாயில் முக்கிய நபர் ஆவார்.

ஹமாஸ் தாக்குதலின்போது கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள தனது அலுவலகத்தில் இஸ்மாயில் மதவழிபாடு செய்த காட்சி தொலைக்காட்சியில் வைரலானது. அப்போதுதான் இஸ்மாயில் இந்த தாக்குதலில் முக்கிய நபராக இருந்தது வெளிஉலகத்திற்கு தெரியவந்தது.

இஸ்மாயிலை குறிவைத்து தாக்குதல்:

ஹமாஸ் ஆயுதக்குழு தாக்குதலை தொடர்ந்து தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் அனைவரும் வீழ்த்தப்படுவர் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழுவின் மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இஸ்மாயிலை குறிவைத்தும் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், தாக்குதல்களில் அவர் தப்பிவந்தார். இஸ்மாயிலுக்கு மொத்தம் 13 பிள்ளைகள் ஆகும். அதேவேளை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இஸ்மாயிலின் குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்மாயிலின் பேத்தி கொல்லப்பட்டார். அதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்மாயிலின் 3 மகன்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்மாயிலின் சகோதரி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

கத்தாரில் இஸ்மாயில்:

இஸ்ரேலால் காசாவில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதையடுத்து இஸ்மாயில் கத்தார் தலைநகர் தோஹாவில் வசித்து வந்தார்.

ஈரான் பயணம்:

ஈரானில் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பதவியேற்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க இஸ்மாயில் கத்தாரில் இருந்து ஈரான் சென்றிருந்தார்.

ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு:

ஈரான் சென்ற இஸ்மாயில் நேற்று நடைபெற்ற அதிபர் மசூத் பெசேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அதன்பின்னர், ஈரான் அதிபருடன் இஸ்மாயில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

துல்லிய தாக்குதல்:

அதிபர் மசூத் பெசேஷ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இஸ்மாயில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் அந்த வீட்டின் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏவுகணை மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்மாயில் பலி:

தெஹ்ரானில் நடத்தப்பட்ட இந்த துல்லிய தாக்குதலில் இஸ்மாயில் மற்றும் அவரது பாதுகாவலர் உயிரிழந்தனர்.

பின்னணியில் இஸ்ரேல்:

இஸ்மாயில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்