அதிகரிக்கும் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் பலியானோர் எண்ணிக்கை 700 -ஐ தாண்டியது
|உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
பெய்ரூட்,
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, உடனடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக களம் இறங்கிய லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர்.
அதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை தொடுத்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்கிற சூழல் உருவானது. இந்த நிலையில் கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கி ஒரே சமயத்தில் வெடித்ததில் 39 பேர் பலியாகினர். 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக கூறிய ஹிஸ்புல்லா அமைப்பினர் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல் கடந்த 4 நாட்களாக லெபனான் மீது பயங்கரமான முறையில் வான்வழி தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் மக்கள் கொத்து, கொத்தாக கொன்று குவிக்கப்படுகின்றனர்.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 81 பேர் பலியானதாகவும், இதனால் மொத்த பலி எண்ணிக்கை 600-ஐ தாண்டியதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் லெபனானில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் 92 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 153 பேர் காயமடைந்துள்ளனர், கடந்த திங்கட்கிழமை முதல் தற்போது வரை அங்கு 700 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்த நிலையில், 90 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே லெபனானில் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஒருவேளை இஸ்ரேல் லெபனானுக்குள் தரைவழி தாக்குதலை தொடங்கினால் அதன் முதல் இலக்காக தெற்கு லெபனான் இருக்கும் எனவும், அங்குள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியை இஸ்ரேல் எளிதாக கைப்பற்றும் எனவும் ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டின் இடையே அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஏதுவாக 21 நாள் போர் நிறுத்தத்தை உடனடியாக அறிவிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், "சமீபத்திய சண்டை சகிக்க முடியாதது. மேலும் அது பிராந்திய விரிவடையும் அபாயத்தை முன்வைக்கிறது. எனவே லெபனான்-இஸ்ரேல் எல்லையில் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறோம். அமைதி பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம். இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசாங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் தற்காலிக போர்நிறுத்தத்தை உடனடியாக அங்கீகரிக்குமாறு நாங்கள் அழைக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹிஸ்புல்லாவுடன் போர்நிறுத்தம் செய்வதற்கான உலகளாவிய அழைப்புகளை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
காசா மற்றும் லெபனான் உடனான போர் நிறுத்தத்திற்கான உலகளாவிய கோரிக்கைகளை இஸ்ரேல் புறக்கணித்து வரும் நிலையில், அமெரிக்காவிடம் இருந்து மொத்தம் 8.7 பில்லியன் டாலர் ராணுவ உதவிகளை பெற உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.