லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; விமானம் இயங்கும்போது தாக்கிய வெடிகுண்டு: வைரலான வீடியோ
|லெபனானில் விமானம் ஒன்று இயங்கி கொண்டிருக்கும்போது, அதனருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு வான் வரை கரும்புகை பரவியது.
பெய்ரூட்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக்கையும் இஸ்ரேல் படுகொலை செய்தது.
தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் அருகே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வான்வழி தாக்குதலில், விமானம் ஒன்று இயங்கி கொண்டிருக்கும்போது, குண்டுவெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் வான் வரை கரும்புகை எழுந்து சுற்றிலும் பரவியது.
அந்த விமானம் ஓடுபாதையில் சென்று மேலே பறக்க தயாரானது. அப்போது, குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. தெற்கு பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பு வலுவாக உள்ளது. இதனால், அதன் கட்டுப்பாட்டில் உள்ள தஹியே என்ற இடத்தின் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
2023-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையேயான தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை விவரங்களை லெபனானின் சுகாதார அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதுபற்றிய செய்தியில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 3,189 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 14,078 ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.