< Back
உலக செய்திகள்
ஏமனில் இஸ்ரேல் அதிரடி வான்வழி தாக்குதல்
உலக செய்திகள்

ஏமனில் இஸ்ரேல் அதிரடி வான்வழி தாக்குதல்

தினத்தந்தி
|
11 Jan 2025 2:58 AM IST

ஏமனில் இஸ்ரேல் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது.

சனா,

இஸ்ரேல், காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழு வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், போரை நிறுத்தவும் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஏமனில் இஸ்ரேல் விமானப்படை நேற்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹுடைடா, ரஸ் இசா நகரங்களில் உள்ள 2 துறைமுகங்கள், ஹஸ்யசா நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையை சேர்ந்த 20 போர் விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தினால் ஏமன் மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்