< Back
உலக செய்திகள்
இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் உச்ச தலைவர் மிரட்டல்
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் உச்ச தலைவர் மிரட்டல்

தினத்தந்தி
|
2 Nov 2024 4:21 PM IST

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

தெஹ்ரான்,

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழு, ஹிஸ்புல்லா அமைப்பு, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இதனிடையே, கடந்த ஏப்ரல் 13ம் தேதி மற்றும் அக்டோபர் 2ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த 2 தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 26ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மிரட்டல் விடுத்துள்ளார். தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் பேசிய அயத்துல்லா அலி கமேனி, ஈரான், ஈரான் மண் மற்றும் எதிர்ப்பு கூட்டணிக்கு (ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி, ஈராக்கில் செயல்படும் பயங்கரவாதிகள்) எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக எதிரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நிச்சயம் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்' என்றார்.

மேலும் செய்திகள்