நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்- ஈரான் உயர் தலைவர் வலியுறுத்தல்
|போர்க்குற்ற வழக்கை விசாரித்த சர்வதேச கோர்ட்டு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
தெஹ்ரான்:
இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஓராண்டை கடந்து நீடிக்கும் நிலையில், இஸ்ரேல் மற்றும் காசா முனையில் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்ட், ஹமாஸ் தலைவர் முகமது தயிப் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இஸ்ரேலுக்கு தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், போர்க்குற்ற வழக்கை விசாரித்த சர்வதேச கோர்ட்டு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது தயிப் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக இஸ்ரேல் தரப்பில் முன்வைக்கப்பட்ட மேல்முறையீட்டை சர்வதேச கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சர்வதேச கோர்ட்டின் கைது வாரண்டை சுட்டிக்காட்டி ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி பேசினார்.
"காசாவிலும் லெபனானிலும் சியோனிச ஆட்சி போர்க்குற்றம் செய்துள்ளது. தற்போது அவர்களை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளனர். இது போதாது. நெதன்யாகு மற்றும் இந்த ஆட்சியின் கிரிமினல் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்றார் காமேனி.
ஈரானின் துணை ராணுவப்படையின் தன்னார்வப் பிரிவான பாசிஸ் அமைப்பின் உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.