ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்
|ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்காது என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
டெல் அவிவ்,
லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக அங்குள்ள எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க இதுவே சரியான தருணம் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னட் தெரிவித்துள்ளார். மேலும் ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக தொடங்க இஸ்ரேல் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசிய ஜோ பைடன் "இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளது. அதே சமயம் ஈரானின் அணுஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்காது" என கூறினார்.
மேலும் ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை என பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இருநாடுகளும் அறிவித்துள்ளன. புதிதாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் 'வழக்கத்திற்கு மாறான பதிலடி' கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.