டிரம்பை கொல்ல ஈரான் சதி...? அமெரிக்காவுக்கு கிடைத்த உளவு தகவல்
|அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், கொலை முயற்சியில் இருந்து தப்பிய பின்னர், கடந்த திங்கட்கிழமை குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பொதுமக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் டிரம்ப் பங்கேற்றார். அப்போது, டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார். அவர், தாமஸ் குரூக் என்ற 20 வயது இளைஞர் என பின்னர் அடையாளம் காணப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கு பின், அமெரிக்க உளவு பிரிவினர் அவரை மேடையில் இருந்து உடனடியாக பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்து சென்றனர். இந்நிலையில், டிரம்பை கொலை செய்வதற்கு ஈரான் நாட்டில் சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.
ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவராக இருந்தவர் காசிம் சுலைமானி. இவர், கடந்த 2020-ம் ஆண்டில் ஆளில்லா விமானம் கொண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோருக்கு ஈரானில் இருந்து கொலை மிரட்டல்கள் விடப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். ஈரான் நாட்டின் தொடர் அச்சுறுத்தலை அடுத்து, அமெரிக்க உளவு அமைப்பு மற்றும் டிரம்பின் பிரசார குழுவினருக்கு அதுபற்றிய எச்சரிக்கை அறிவிப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, டிரம்புக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். எனினும், டிரம்ப் மீது கடந்த சனிக்கிழமை நடந்த கொலை முயற்சிக்கும், ஈரான் சதி திட்டத்திற்கும் இதுவரையில் எந்தவித தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்பின் செய்தி தொடர்பாளர் அந்தோணி குக்லியெல்மி கூறும்போது, தீவிர மிரட்டல் தொடர்பான புதுப்புது தகவல்கள் தொடர்ந்து எங்களுக்கும் மற்றும் பிற அமைப்புகளுக்கும் வந்து கொண்டிருக்கின்றன. தேவைப்படும்போது, வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
ஈரான் நாட்டிடம் இருந்து டிரம்புக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பெண் செய்தி தொடர்பாளர் ஏத்ரியன் வாட்சன் கூறினார்.
இதுபற்றி ஐ.நா.வில் உள்ள ஈரான் தூதரகம் கூறும்போது, இது மிகைப்படுத்தப்பட்டது மற்றும் கெட்ட நோக்கம் கொண்டது என தெரிவித்ததுடன், டிரம்ப் குற்றம்புரிந்த நபர் என்றும் அவர் சட்டப்படி விசாரிக்கப்பட்டு, கோர்ட்டில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.
இந்த பரபரப்புக்கு இடையே, கொலை முயற்சியில் இருந்து தப்பிய டிரம்ப், கடந்த திங்கட்கிழமை குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பொதுமக்கள் முன் தோன்றி உரையாற்றினார். அப்போது, அவருடைய வலது காதில் வெள்ளை நிறத்தில் கட்டு போடப்பட்டு இருந்தது. அவர் ஆதரவாளர்களை நோக்கி கையசைத்ததும், பார்வையாளர்கள் வரிசையில் இருந்தவர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனர்.