< Back
உலக செய்திகள்
கனடாவில் இந்திய இளைஞர் படுகொலை: வைரலான வீடியோ
உலக செய்திகள்

கனடாவில் இந்திய இளைஞர் படுகொலை: வைரலான வீடியோ

தினத்தந்தி
|
9 Dec 2024 12:55 AM IST

கனடாவில் இந்திய இளைஞர் படுகொலை சம்பவத்தில், ஈவான் ரெயின் மற்றும் ஜூடித் சால்டீக்ஸ் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

எட்மண்டன்,

கனடா நாட்டில் எட்மண்டன் நகரில் வசித்து வந்தவர் ஹர்ஷன்தீப் சிங் (வயது 20). இந்தியாவை சேர்ந்தவரான இவர், பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளி கிழமை இரவு 12.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இதுபற்றிய சி.சி.டி.வி. வீடியோ பதிவு ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது. அதில், 3 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் சிங்கை பிடித்து, படியில் தள்ளி விடுகிறார். மற்றொரு நபர் பின்னால் இருந்தபடி துப்பாக்கியால் சுடுகிறார்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் வந்தனர். அவர்கள், படியில் கிடந்த சிங்கை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் முன்பே உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில், ஈவான் ரெயின் மற்றும் ஜூடித் சால்டீக்ஸ் என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் 30 வயதுடையவர்கள். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த 1-ந்தேதி ஒன்டாரியோ மாகாணத்தில், குராசிஸ் சிங் (வயது 22) என்பவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். லேம்டன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வர்த்தக மேலாண்மை படிப்பை படித்து வந்த அவர் தங்கியிருந்த வீட்டில் உடன் வசித்த கிராஸ்லி ஹன்டர் (வயது 36) என்ற நபருடன் சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் படுகொலை செய்யப்பட்டார். கனடாவில் ஒரு வாரத்திற்குள் 2-வது இந்தியர் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகள்