பிறந்தநாளில் சோகம்: துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் பலி
|தெலுங்கானாவை சேர்ந்த ஆர்யன் அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு பயின்று வந்தார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் பயின்றுவந்த இந்திய மாணவரான ஆர்யன் ரெட்டி (23 வயது), அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, அவர் வைத்திருந்த துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குண்டுபாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த முதுகலை மாணவரான ஆர்யன், சமீபத்தில் அவர் வாங்கிய துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது, துப்பாக்கி தற்செயலாக சுட்டதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும், ஆர்யன் அறைக்கு வந்த அவரது நண்பர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, ஆர்யனை அருகில் உள்ள மருத்துவனையில் சேர்த்தனர். ஆனால் ஆர்யன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆர்யன் ரெட்டியின் குடும்பத்தினர் தெலுங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள் தற்போது உப்பல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். ஆர்யன் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பெற்றோரை பார்க்க வருவதாக ஆர்யன் கூறியிருந்தார். மகனை பார்க்க போகும் மகிழ்ச்சியில் இருந்த பெற்றோரிடம், அவரது உடல் ஒப்படைக்கப்பட உள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.