அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டி - இந்திய வம்சாவளி மாணவர் சாம்பியன்
|அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
வாஷிங்டன்,
உலகப்புகழ் பெற்ற 'ஸ்பெல்லிங் பீ'' எனப்படும் சொற்களை சரியாக உச்சரிக்கும் போட்டி 1925-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன்படி இந்த ஆண்டு நடந்த போட்டியில் 1.1 கோடி பேர் பங்கேற்றனர். அவர்களில் இருந்து தகுதிச்சுற்றுக்கு 228 பேரும், இறுதிப்போட்டிக்கு 8 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் ‛ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ-2024' இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதியில் நடைபெற்ற டை பிரேக்கர் சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது மாணவர் புருகத் சோமா 90 விநாடிகளில் 29 வார்த்தைகளை சரியாக உச்சரித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
வெற்றி பெற்ற புருகத் சோமாவிற்கு 50 ஆயிரம் டாலர் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த பைஜன் ஜகி என்ற மாணவர் 2-வது இடத்தையும், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஷ்ரேய் பரேக் 3-வது இடத்தையும் பிடித்தனர். இந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் பங்கேற்ற 8 பேரில் 6 பேர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.