< Back
உலக செய்திகள்
பதவியை ராஜினாமா செய்த ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் தேர்தலில் களம் இறங்கும் இந்தியர்
உலக செய்திகள்

பதவியை ராஜினாமா செய்த ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் தேர்தலில் களம் இறங்கும் இந்தியர்

தினத்தந்தி
|
11 Jan 2025 7:15 AM IST

கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சி எம்.பி.யும், இந்தியருமான சந்திரா ஆர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒட்டாவா,

கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ (வயது 53) செயல்பட்டு வந்தார். 2015ம் ஆண்டு முதல் 9 ஆண்டுகள் கனடாவின் ஜஸ்டின் செயல்பட்டு வந்தார். அதேபோல், லிபரல் கட்சியின் தலைவராகவும் அவர் செயல்பட்டார். இதனிடையே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு அந்நாட்டு மக்களிடையே பெருமளவு குறைந்து வந்தது. மேலும், சொந்த கட்சிக்குள்ளும் செல்வாக்கு குறைந்தது.

கனடா பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில் கனடா மீது அதிக அளவில் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் நாட்டின் பொருளாதார சூழ்நிலை, சொந்த கட்சிக்குள் கடும் எதிர்ப்பு, பொதுமக்களிடம் ஆதரவு குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். அதேபோல், லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.

அதேவேளை, நாட்டின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை இடைக்கால பிரதமராக தொடர்ந்து செயல்படுவதாக ட்ரூரோ அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை வருகிற மார்ச் 9-ந் தேதி நடத்த ஆளும் லிபரல் கட்சி முடிவு செய்துள்ளது. இதில் அதிக வாக்குகள் பெறுபவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே கனடாவின் புதிய பிரதமராகவும் பதவியேற்பார்.

இதனிடையே பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சி எம்.பி.யும், இந்தியருமான சந்திரா ஆர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவரான சந்திரா ஆர்யா, தற்போது கனடாவின் ஒட்டாவா மாகாண எம்.பி.யாக இருந்து வருகிறார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "கனடா தனது தலைவிதியை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. கனடாவை ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக மாற்ற விரும்புகிறேன். இதை சாத்தியமாக்கக ஒதுக்கீட்டின் அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிசபையுடன் ஒரு சிறிய மற்றும் திறமையான அரசாங்கத்தை வழிநடத்த விரும்புகிறேன்" என்று அதில் சந்திரா ஆர்யா பதிவிட்டிருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடா பார்லிமென்டில், தாய்மொழியான கன்னடத்தில் பேசும் வீடியோ வைரலானபோது சந்திரா ஆர்யா கவனம் பெற்றார். இவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவாளர் ஆவார். அவரது கட்சி எம்.பி.,யாகவ்ய்ம் இருந்து வருகிறார். சமீபத்தில் வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

கனடாவின் புதிய பிரதமர் பதவிக்கு சந்திரா ஆர்யா மற்றும் முன்னாள் எம்.பி பிராங்க் பெய்லிஸ் ஆகிய இருவர் மட்டுமே போட்டியிடுவதை முறையாக அறிவித்துள்ளனர்

மேலும் செய்திகள்