< Back
உலக செய்திகள்
வங்காளதேசத்தில் வன்முறை: இந்தியர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் - தூதரகம் வேண்டுகோள்
உலக செய்திகள்

வங்காளதேசத்தில் வன்முறை: இந்தியர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் - தூதரகம் வேண்டுகோள்

தினத்தந்தி
|
19 July 2024 6:00 AM IST

வங்காளதேசத்தில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது.

டாக்கா

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் முறைகேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அப்போது ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதனையடுத்து டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதேசமயம் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினர் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் 15 போலீசார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அந்த பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது. இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 6 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் ஏராளமான போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், 'நாட்டில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, வங்காளதேசத்தில் உள்ள இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்கள் தங்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்வதைக் குறைக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது' எனக் குறிப்பிட்டிருந்தது.

மேலும் செய்திகள்