< Back
உலக செய்திகள்
அமெரிக்க பாடகி செலினாவிடம் ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொன்ன இந்தியர்
உலக செய்திகள்

அமெரிக்க பாடகி செலினாவிடம் 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச் சொன்ன இந்தியர்

தினத்தந்தி
|
1 Nov 2024 8:39 PM IST

அமெரிக்க பாடகி செலினாவிடம் 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச் சொல்லி இந்தியர் ஒருவர் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகியும், நடிகையுமான செலினா கோமஸ், உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு பாப் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். செலினா கோமஸ், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், பல்லவ் பலிவால் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியர் ஒருவர், செலினாவை சந்தித்து செல்பி புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது செலினாவிடம் 'ஜெய் ஸ்ரீராம்' என்று ஒருமுறை கூறுமாறு அந்த நபர் கேட்கிறார். அவர் சொன்னது செலினாவுக்கு புரியவில்லை. உடனே அந்த நபர், "ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் மிகச்சிறந்த வாசகம்" என்று கூறுகிறார். அதற்கு செலினா "நன்றி" என்று கூறிவிட்டுச் செல்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர், செலினாவிடம் 'ஜெய் ஸ்ரீராம்' செல்லச் சொல்லி கேட்ட இந்தியரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு சக இந்தியராக இதை பார்ப்பதற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் இது ஒரு மோசமான செயல் என்றும், தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு என்றும் பலர் விமர்சித்துள்ளனர்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பல்லவ் பலிவால் என்பவர், தீபாவளி பண்டிகையன்று இந்தியர் ஒருவர் செலினாவை சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் செலினா கோமஸ் அணிந்திருக்கும் உடையை பார்த்த ரசிகர்கள், இது கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.


மேலும் செய்திகள்