< Back
உலக செய்திகள்
இந்தியா அப்படி செய்யாது..  அமெரிக்க பத்திரிகை செய்திக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் மறுப்பு
உலக செய்திகள்

இந்தியா அப்படி செய்யாது.. அமெரிக்க பத்திரிகை செய்திக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் மறுப்பு

தினத்தந்தி
|
2 Jan 2025 1:57 PM IST

போதுமான ஆதரவு கிடைக்காததால் முய்சுவின் ஆட்சியை அகற்றுவதற்கான முயற்சியை இந்தியா தொடரவில்லை என வாஷிங்டன் போஸ்ட் கூறியிருந்தது.

மாலி:

மாலத்தீவில் அதிபர் முகமது முய்சுவை பதவி நீக்கம் செய்வதற்கு சதி நடந்ததாகவும், அந்த திட்டத்தில், எதிர்க்கட்சியுடன் இந்தியா கூட்டு சேர்ந்ததாகவும், அமெரிக்க பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மாலத்தீவு அதிபராக முகமது முய்சு கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்வதற்கான திட்டத்தை இந்திய உளவுத்துறை ஆராய்ந்ததாக வாஷிங்டன் போஸ்ட் கூறியிருந்தது.

முய்சுவின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் உட்பட 40 எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்து அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி முன்வந்ததாகவும், மேலும் 10 மூத்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க திட்டமிட்டதாகவும் அந்த செய்தியில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், போதுமான ஆதரவு கிடைக்காததால் முய்சுவின் ஆட்சியை அகற்றுவதற்கான முயற்சியை இந்தியா தொடரவில்லை அல்லது நிதி வழங்கவில்லை என்றும் வாஷிங்டன் போஸ்ட் கூறியிருந்தது. இந்த செய்தி இரு நாட்டு அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த செய்தியை மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவர் முகமது நஷீத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

அதிபருக்கு எதிராக எந்த ஒரு தீவிர சதி பற்றியும் எனக்கு தெரியாது. சிலர் எப்போதும் சதியிலேயே வாழ்கிறார்கள். மாலத்தீவின் ஜனநாயகத்தை எப்போதும் ஆதரிப்பதால், இந்தியா அத்தகைய நடவடிக்கையை ஆதரிக்காது. இந்தியா ஒருபோதும் எங்களுக்கான வழிகள் குறித்து கட்டளையிட்டதில்லை.

ஆட்சி மாற்றத்தில் மாலத்தீவு எதிர்க்கட்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருக்கும் என்று நான் நம்பவில்லை. என்னிடம் அதுபற்றி பேசவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்