உலக செய்திகள்
அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு: மன்மோகன் சிங்கிற்கு ஜோ பைடன் புகழஞ்சலி
உலக செய்திகள்

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு: மன்மோகன் சிங்கிற்கு ஜோ பைடன் புகழஞ்சலி

தினத்தந்தி
|
28 Dec 2024 4:13 PM IST

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் உயிரிழந்தார். திடீர் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர், இன்று காலை 8 மணிக்கு அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. ஜனாதிபதி முர்மு , பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே , பூட்டான் மன்னர் ஜிக்மி ஹிசர் உள்பட பல்வேறு தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், "இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மன்மோகன் சிங் இழப்பு வருத்தம் அளிக்கிறது. மன்மோகனின் தொலைநோக்கு மற்றும் அரசியல் துணிவு இல்லாமல் இந்தியா - அமெரிக்க இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருப்பதற்கு சாத்தியமில்லை. இரு நாடுகளின் வளர்ச்சிக்காக புதிய பாதை அமைத்து, அதை வலுப்பெறச் செய்தவர். அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்குவது, முதல் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பின் நாடுகளுக்கு இடையே குவாட் கூட்டமைப்பு தொடங்குவதற்கு உதவியது வரை, அவர் நமது நாடுகளையும் உலகையும் தொடர்ந்து பல தலைமுறைகளாக பலப்படுத்தும் பாதையை உருவாக்கி தந்ததின் முன்னேற்றத்தையும் பட்டியலிட்டார்.

அவர் ஒரு உண்மையான அரசியல்வாதி. அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவகர். அனைத்தையும் தாண்டி மிகவும் அன்பான, அடக்கமான மனித புனிதர். 2008-ம் ஆண்டு வெளிநாட்டு உறவுகளுக்கான செனட் வெளியுறவு குழுவின் தலைவராகவும், 2009-ம் ஆண்டு அரசுமுறை பயணமாக அமெரிக்கா வந்த போது துணை அதிபராக பிரதமர் சிங்கை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். 2013-ல் புதுடெல்லியில் அவர் எனக்கு விருந்து அளித்தார். இந்த இக்கட்டான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அதில் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்