காதலிக்கு தெரிந்து விட்டால்...? முதலாளியை கொடூர கொலை செய்த உதவியாளர் - அதிர்ச்சி காரணம்
|சலேவின் உறவு முறை பெண் அவரை தேடி வீட்டுக்கு சென்றபோது, அறை ஒன்றில் தலையின்றி கிடந்த சலேவின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.
நியூயார்க்,
அமெரிக்காவில் தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் பஹீம் சலே (வயது 33). நைஜீரியாவை அடிப்படையாக கொண்ட கோகடா என்ற மோட்டார்பைக் தொழில் சார்ந்த நிறுவனம் ஒன்றின் உயரதிகாரியாகவும், முதலாளியாகவும் சலே இருந்துள்ளார்.
இவருடைய தனி உதவியாளர் டைரிஸ் ஹஸ்பில் (வயது 25). இந்நிலையில், சமீபத்தில் சலே கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளார். சலேவின் உறவு முறை பெண் ஒருவர் சலேவை தேடி வீட்டுக்கு சென்றபோது, அறை ஒன்றில் தலையின்றி உடல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீசிடம் தெரிவித்து இருக்கிறார்.
இதுபற்றி போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சலேவின் கொலை விவரம் தெரிய வந்தது. ஹஸ்பில்லுக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மரீன் சாவிஜ் என்ற காதலி ஒருவர் இருக்கிறார். இந்த சூழலில், சலேவுக்கு தெரியாமல் ஹஸ்பில் பணம் கையாடலில் ஈடுபட்டு இருக்கிறார்.
இந்த விசயம் பற்றி ஹஸ்பில்லிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சலே கேட்டிருக்கிறார். முதலில், ரூ.74 லட்சம் பணம் காணாமல் போயுள்ளது. இதனை சலே கண்டுபிடித்து இருக்கிறார். கணக்கில் இருந்து பணம் காணாமல் போனதில் ஹஸ்பில்லுக்கு உள்ள தொடர்பு பற்றி சலேவுக்கு தெரிய வந்தபோதும், தன்னுடைய உதவியாளர் என்பதற்காக அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எதனையும் சலே எடுக்க மறுத்து விட்டார்.
ஹஸ்பில் திருடிய தொகையை திரும்ப தரும் வாய்ப்பை அவருக்கு சலே வழங்கினார். எனினும், சலேவின் நிறுவனத்தில் இருந்து ஹஸ்பில் தொடர்ந்து திருடி வந்துள்ளார். இதன்படி, ரூ.3.3 கோடி வரை பணம் சுருட்டியிருக்கிறார். இதன் முடிவில், மீண்டும் சலேவிடம் சிக்கியுள்ளார்.
இந்த முறை ஹஸ்பில்லுக்கு இரண்டே இரண்டு வாய்ப்புகள் கைவசம் இருந்தன. ஒன்று தற்கொலை செய்வது அல்லது கொலை செய்வது. அவர் 2-வது வாய்ப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார். இதுதவிர, இவர் பணம் திருடியது பற்றி காதலி மரீனுக்கு தெரிய கூடாது என நினைத்திருக்கிறார்.
அப்படி தெரிந்து விட்டால், அவரை விட்டு காதலி பிரிந்து சென்று விடுவார் என்றும் நினைத்திருக்கிறார். இதனால், எல்லாவற்றையும் மறைக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால், அது முடியவில்லை.
இதனை தொடர்ந்து, சலேவின் ரூ.20 கோடி மதிப்பிலான லோயர் ஈஸ்ட் சைடு பகுதியில் உள்ள குடியிருப்புக்கு ஹஸ்பில் முகமூடி அணிந்து சென்றுள்ளார். சலேவை டேசர் எனப்படும் ஒரு வகை கருவியை கொண்டு தாக்கி, அவரை தளர்வடைய செய்துள்ளார். இதன்பின்னர், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
அடுத்த நாள், சலேவின் உடலில் இருந்து தலையை தனியாக எடுத்து சென்றுள்ளார். தடயம் எதுவும் தெரிந்து விட கூடாது என்பதற்காக திட்டமிட்டு செயல்பட்டார். இந்த கொடூர கொலைக்கு பின்னர், அந்த பகுதியை சுத்தம் செய்ய முயன்றுள்ளார்.
இதற்கும் சலேவின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாகனத்தில் பயணித்து தேவையான பொருட்களை வாங்கி வந்துள்ளார். எனினும், டேசரை ஆன்லைனில் வாங்க பயன்பட்ட, தனித்துவ எண் கொண்ட டிஸ்க் ஒன்றை தவறுதலாக சம்பவ பகுதியில் விட்டு விட்டார். அதனை கொண்டு, போலீசார் ஹஸ்பில்லை பிடித்தனர்.
அவரை கைது செய்ய சென்றபோது, ஹஸ்பில் வேறொரு பெண்ணுடன் இருந்துள்ளார். அந்த பெண்ணின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பலூன்கள், பூங்கொத்துகளை வாங்கி கொண்டு இருந்துள்ளார். கேக், பரிசு பொருட்களையும் வாங்கியுள்ளார்.
சலேவின் கிரெடிட் கார்டு உதவியுடன் விலையுயர்ந்த பல பொருட்களை அவர் வாங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஹஸ்பில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.