< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்

ஐஸ்லாந்தில் கடந்த 9 மாதங்களில் 6-வது முறையாக வெடித்த எரிமலை

தினத்தந்தி
|
23 Aug 2024 3:00 PM IST

ஐஸ்லாந்தில் கடந்த 9 மாதங்களில் 6-வது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

ரேக்ஜவிக்,

வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில், சராசரியாக 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எரிமலை வெடிப்பு ஏற்படுகிறது. அங்கு கடந்த 2010-ம் ஆண்டு ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் அதிக சேதங்கள் ஏற்பட்டன. சுமார் 4 மாதங்களுக்கு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐஸ்லாந்தின் தலைநகர் ரேக்ஜவிக்கில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிரிண்டாவிக் என்ற பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அங்கு கடந்த 9 மாதங்களில் 6-வது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் அங்கு லேசான நிலநடுக்கங்களும் ஏற்பட்டன. எரிமலையில் இருந்து வெளியேறும் எரிமலைக் குழம்பை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே இருக்கும் கிரிண்டாவிக் நகரில் இருந்து ஏற்கனவே பெரும்பாலான மக்கள் வெளியேறிவிட்டனர். இருப்பினும், இந்த எரிமலை வெடிப்பால் கிரிண்டாவிக் பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எரிமலை வெடிப்பு காரணமாக விமான சேவைகளில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்