'நான் இந்தியன், தமிழை தாய் மொழியாக கொண்டவன் என்பதுதான் நம் அடையாளம்' - நியூசிலாந்து தமிழ்ச் சங்கத்தில் அப்பாவு பேச்சு
|நான் இந்தியன், பிறப்பால் தமிழை தாய் மொழியாக கொண்டவன் என்பதுதான் நம் அடையாளம் என நியூசிலாந்து தமிழ்ச் சங்கத்தில் அப்பாவு தெரிவித்தார்.
வெல்லிங்டன்,
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நகரில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கிருந்து மெல்போர்ன், கெயின்ஸ் நகரங்களுக்கு பயணம் செய்தார். பின்னர் நியூசிலாந்து நாட்டிற்கு சென்றடைந்தார். அங்கு ஆக்லாந்து நகரிலுள்ள தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பாவு உரையாற்றியதாவது:-
"சிங்கப்பூர், மலேசியா, கனடா போன்ற நாடுகளில் ஏராளமான தமிழர்கள் இருப்பார்கள். தமிழ்நாட்டில் பட்டம் படித்து, பொறியாளர் என்ற பட்டத்தோடு இங்கே வந்திருக்கிறீர்கள். இங்கே இருக்கின்ற மொழியோடு நீங்கள் சங்கமம் ஆகியுள்ளீர்கள். நீங்கள் கண்டிப்பாக தமிழ் பேச வேண்டுமென்கின்ற அவசியம் இங்கே இல்லை.
ஆங்கில மொழியை தமிழ்நாட்டிலேயே கற்றுக் கொண்டுதான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். இங்கே உங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உருவாக்கியுள்ளீர்கள். இந்த நாடு ஒரு தூய்மையான நாடாக இருக்கிறது. இந்த நாட்டிற்கு நாம் வேலைக்காக வந்துள்ளோம். இங்கே உங்களை நான் சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில்தான், 1996 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத் துறையில், பொறியியல் துறைக்கென்று தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அவர்தான், சென்னையில் டைடல் பார்க்கையும், சிறுசேரியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவையும் தொடங்கினார். அதற்கு முன்பு வரை, பெங்களூருதான் தகவல் தொழில் நுட்பத்திற்கான நகரமாக இருந்தது. கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வசித்தவர்கள் அதைக் கற்று உலகம் முழுவதும் வேலைக்காக சென்று கொண்டிருந்தார்கள்.
கலைஞர் சென்னையில் டைடல் பார்க்கையும், சிறுசேரியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவையும் தொடங்கிய பிறகுதான், ஆண்டுக்கு 2 லட்சம் நபர்கள் அந்தப் பட்டப் படிப்புகளை படித்து முடிப்பதுடன், பல்வேறு நாடுகளிலும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். அந்த வாய்ப்பை பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்தான்.
அந்த காலகட்டத்தில், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே மென்பொருள் இருந்தது. தமிழுக்கு கிடையாது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, தமிழில் மென்பொருள், கீ-போர்டு கொண்டு வரப்பட்டது. இப்போது நம்முடைய அழகு தமிழில் வாட்ஸ்ஆப்பில், தட்டச்சு செய்து செய்திகள் அனுப்புகிறோம் என்றால் அந்த வாய்ப்பையும் நமக்கு பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்தான்.
ஒரு மொழியை அழித்துவிட்டால் அந்த இனமே அழிந்துவிடும். ஒவ்வாரு காலகட்டத்திலும் தமிழ் மொழியை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று பல்வேறு முயற்சிகள் தமிழ்நாட்டில் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விஷயத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை மறக்கவே முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்திய பிறகு, நாடாளுமன்றத்தில் இந்தியை ஆட்சி மொழியாக கொண்டு வந்த பிறகு, நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.
அப்போது, நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் பேசுகையில், இந்தி மொழியைத்தான் அதிகமான மக்கள் பேசுவார்கள் என்றும், அதனால், இந்தி மொழிதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்று சொன்னார்கள். இதற்கு, பேரறிஞர் அண்ணா, 'காக்கை பறவைதான் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. மயில் பறவை குறைவாகத்தான் உள்ளது. ஆனால், நாம் மயிலை தான் தேசிய பறவையாக வைத்துள்ளோம். எனவே, உறுப்பினர் தெரிவித்த ஒப்பீடு நியாயமானதாக இல்லை' என்று பதிலளித்தார். அவர் குறிப்பிட்டது, நாடாளுமன்ற பதிவேட்டிலேயே இருக்கிறது.
எங்கள் மொழிக்குரிய அங்கீகாரம் வேண்டும். ஆகவே, தமிழ்நாட்டில், நாங்கள் தமிழை ஆட்சிமொழியாக வைத்துக் கொள்கிறோம். தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை வைத்துக் கொள்கிறோம். ஆங்கில மொழியை கற்றுக்கொண்டால் எங்கள் மக்கள் உலக அளவில் செல்வதற்கு வசதியாக இருக்கும். ஆங்கில மொழியை நாங்கள் கண்டிப்பாக கற்றுக் கொள்வோம் என்றார்.
ஜவஹர்லால் நேரு, பிரதமராக பொறுப்பு வகித்த காலத்தில், 'இந்தியை நீங்கள்(தமிழர்கள்) ஏற்றுக்கொள்ளாதவரை, தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இருக்கும் என்று சொன்னதன் அடிப்படையில்தான், தமிழ் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை அழிக்க நினைத்தால் அது யாராலும் முடியாது.
உலகில் தோன்றிய முதல் மூன்று மொழிகள் ஹிப்ரு, லத்தீன், தமிழ் ஆகிய மொழிகள்தான். அந்த மொழிகளில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரே மொழி தமிழ் மொழிதான். உலகம் முழுவதும் 10 கோடி மக்களுக்கு மேல் பேசுகிற மொழி. தமிழில் இல்லாத இலக்கியம் இல்லை. வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டுமென்பது குறித்து உலகப் பொதுமறையான திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத்தில் எந்தப் பாடத்தில் எடுத்து படிக்க சொன்னாலும், அவர்கள் எவ்வாறு வாழ வேண்டுமென்பதற்கு ஒரு வழியைக் காட்டக்கூடிய நூல் திருக்குறள்.
தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு என பல்வேறு வகையான இலக்கியங்கள் உள்ளது. ஒரு இலக்கை காட்டுவதுதான் இலக்கியம். அது என்ன இலக்கு என்றால், மனித உயிரினம் எவ்வாறு வாழ வேண்டுமென்பதற்கான இலக்கை காட்டிக் கொடுப்பதுதான் இலக்கியம். அதுமாதிரியான எண்ணற்ற இலக்கியங்கள் தமிழில் உள்ளன. அவையெல்லாம் அரிய பொக்கிஷங்கள் ஆகும். அவற்றையெல்லாம் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
தமிழ்மொழிக்குள்ள பெருமை உங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. இந்தியாவில் சிந்து சமவெளியில்தான் முதன் முதலாக நாகரீகம் தோன்றியது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை இல்லையென்று சொன்னது, வட அயர்லாந்தில் பிறந்து, லண்டனில் படித்து இந்தியா வந்து தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டம், இடையங்குடியில் வாழ்ந்து மறைந்த கால்டுவெல்தான்.
18 ஆண்டுகாலம் பல மொழிகளைப் பற்றி கற்றார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஒரியா உள்ளிட்ட 18 மொழிகளையும் கற்றார். அதன்பிறகு அந்த மொழிகளை ஒப்பிடுகிறார். அதுவரை, சிந்து சமவெளியில்தான் நாகரீகம் தோன்றியது. சமஸ்கிருத மொழியிலிருந்து தோன்றியதுதான் தமிழ் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த மாயையை மாற்றி, சமஸ்கிருதத்திற்கு முன்பே தோன்றிய மொழிதான் தமிழ் என்று கூறினார்.
இங்குள்ள தமிழர்களுக்கு ஒரு நாகரீகம் இருந்துள்ளது என்பதையெல்லாம் கண்டறிந்து, அவர் எழுதிய ஒப்பிலக்கணக்கம்தான் திராவிட மொழி குடும்பம். தமிழ் மொழியிலிருந்து தோன்றியதுதான் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள். இந்தியாவில் தமிழ் மொழிக்குத்தான் முதன்முதலில் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. அதைப் பெற்றுத் தந்தது கலைஞர்தான். அதன் பிறகுதான் மற்ற மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது.
இந்தியாவில் தோன்றிய மொழிகளில் தமிழ் மட்டுமே பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, சிங்கப்பூர், கனடா, மொரிசியஸில் தமிழ் ஆட்சி மொழி. மலேசியாவில் கூடுதல் ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது. இந்தியாவில் ஆட்சி மொழியில் தமிழ் இல்லை. ஆனால், வெளிநாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது. அதனால்தான் தமிழ் மொழியை படிக்க வேண்டுமென்று சொல்கிறேன்.
நான் இந்தியன், பிறப்பால் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவன் என்பதுதான் நம் அனைவருக்கும் அடையாளம், பெருமை. அதை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழை கற்க வேண்டும். அதற்கு என்ன உதவி வேண்டுமோ அனைத்து உதவிகளையும் செய்து தருவதற்கு முதல்-அமைச்சர் தயாராக உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.