பாரீஸ் நகரத்தில் வீடுகள் இன்றி சாலையோரம் வசித்த மக்கள் வெளியேற்றம்
|ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை சாலையோரம் வசித்த மக்களை தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
பாரிஸ்,
உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தொடக்க விழாவை மைதானத்தில் இல்லாமல், பாரீசின் புகழ்பெற்ற சென் நதி கரையில் நடத்துகிறார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இதையொட்டி அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளால் பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனிடையே, பாரிஸ் நகரங்களில் வீடுகள் இன்றி சாலையோரம் வசித்த மக்களை அங்குள்ள பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். சாலையோரம் வசித்தவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் ஆவர். ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை இவர்களை தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன.