சுவிட்சர்லாந்தில் இந்திய தொழிலாளர்களை பூட்டிய அறையில் வைத்து துன்புறுத்திய இந்துஜா குடும்பத்தினர்
|சுவிட்சர்லாந்தில் இந்துஜா குடும்பத்தினர் இந்திய தொழிலாளர்களை பூட்டிய அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பெர்ன்,
உலகின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான இந்துஜா குழுமம் ஆட்டோமொபைல், வங்கி, ஐ.டி., ரியல் எஸ்டேட் என பல துறைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆசியாவின் முதல் 20 பணக்கார குடும்பங்களில் ஒன்றாக இந்துஜா குடும்பம் விளங்குகிறது. இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால், அவர்களின் மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோர் சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றனர்.
இவர்கள் இந்தியர்கள் சிலரை சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்துக்கு அழைத்து சென்று வீட்டு பணியாளர்களாக வேலைக்கு அமர்த்தியதாகவும், அந்த பணியாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கி, அவர்களை துன்புறுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமாலுக்கு தலா 4½ ஆண்டுகளும், அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு தலா 4 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து சுவிட்சர்லாந்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பான வாதத்தின்போது, இந்துஜா குடும்பத்தினர் வீட்டுப் பணியாளர்களின் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு, அவர்களை வீட்டை விட்டு வெளியேற விடாமல் அடைத்து வைத்திருந்ததாகவும், அவர்களை வீட்டின் கீழ் தளத்தில் ஜன்னல்கள் இல்லாத அறைகளில் பூட்டி வைத்து துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் இந்துஜா குடும்பத்தினர் பிரான்ஸ், மொனாக்கோ உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும்போது பணியாளர்களையும் அழைத்துச் சென்றதாகவும், அங்கும் அவர்கள் இதே போன்ற கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த இந்துஜா குடும்பத்தினர் தரப்பு வழக்கறிஞர் ரோமெய்ன் ஜார்டன், இவை மிகைப்படுத்தப்பட்ட, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்துஜா குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.