வங்கதேசத்தில் இந்து மத தலைவர் கைது: ஷேக் ஹசீனா கண்டனம்
|வங்கதேசத்தில் இந்து மதத்தலைவர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.
டாக்கா,
வங்கதேசத்தில் உள்ள, 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், 'இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி இந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாசை சமீபத்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது. அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.
இவரது கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஹிந்து மதத்தை சேர்ந்த தலைவரை போலீசார் தவறாக கைது செய்துள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். " என்றார்.