< Back
உலக செய்திகள்
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்.. வங்காளதேசத்திற்கு அமெரிக்க இந்து அமைப்புகள் கடும் கண்டனம்
உலக செய்திகள்

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்.. வங்காளதேசத்திற்கு அமெரிக்க இந்து அமைப்புகள் கடும் கண்டனம்

தினத்தந்தி
|
28 Nov 2024 11:57 AM IST

வங்காளதேச அதிகாரிகள் அங்குள்ள ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹெபாசாத்-இ-இஸ்லாம் போன்ற மதவாத குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக இந்து அமைப்பு கூறி உள்ளது.

வாஷிங்டன்:

வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுகின்றன. ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்ந்தபின்னர், இந்துக்களுக்கு எதிரான வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந்து அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ், தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரம் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. கிருஷ்ண தாசை கைது செய்தது மட்டுமின்றி அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டது. இதனால், தலைநகர் டாக்கா மற்றும் துறைமுக நகரமான சட்டோகிராம் உட்பட பல்வேறு இடங்களில் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்காளதேச வன்முறை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்துக்களுக்கு எதிரான வன்முறையை வங்காளதேச இடைக்கால அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால் வங்காளதேசத்திற்கு அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், வங்காளதேசத்திற்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியானது, அந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பொருத்து தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.

இந்து அமைப்பு தலைவர் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டது, சிட்டகாங்கில் உள்ள காளி கோவில் உடைக்கப்பட்டது மற்றும் வங்காளதேசம் முழுவதும் இந்துக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் அதிருப்தி அளிப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமெரிக்கா (விஎச்பிஏ) தலைவர் அஜய் ஷா கூறி உள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் நினைவுகூர விரும்பும் மனித உரிமைகள் மரபு இதுதானா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஹிந்து பரிஷத் அமெரிக்கா (விஎச்பிஏ) பொதுச்செயலாளர் அமிதாப் மிட்டல் கூறுகையில், "வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து வரும் அட்டூழியங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் மவுனம் காக்கின்றன. சமீபத்தில் இஸ்கான் துறவி கைது மற்றும் இந்து கோவில்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் மத சகிப்புத்தன்மையின்மை அபாயகரமான நிலைக்கு சென்றிருப்பதை காட்டுகிறது. இந்த சம்பவங்கள் பாகுபாட்டின் ஒரு பகுதியாகும்" என்றார்.

வங்காளதேசத்தில் நடக்கும் தாக்குதல்கள் தொடர்பாக சர்வதேச அளவில் கண்டனம் இல்லாதது, குற்றவாளிகளுக்கு மேலும் தைரியத்தை அளிக்கிறது, வங்காளதேசத்தில் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் மிட்டல் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு, ஹிந்துஸ் பார் அமெரிக்கா பர்ஸ்ட் (எச்.எப்.ஏ.எப்.) என்ற இந்து அமைப்பின் நிறுவனர் உத்சவ் சந்துஜா விரிவான கடிதம் எழுதி உள்ளார். அதில், கூறியிருப்பதாவது:

சீனாவின் லட்சியங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள வங்காளதேசத்தில் உள்ள திட்டங்களுக்கு அமெரிக்க நிதியுதவியை நிறுத்தவேண்டும். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

வங்காளதேசத்தில் இந்து, பவுத்த மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் அமைப்புரீதியான வன்முறை மற்றும் பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ளன. அந்த நாட்டின் அரசாங்கம் இந்த மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதைப் பொருத்து அமெரிக்க உதவியை உங்கள் நிர்வாகம் தொடர்ந்து வழங்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மக்களின் வரிப்பணம், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடிமக்களை பாதுகாக்க தவறிய அரசாங்கங்களுக்கு ஒருபோதும் சென்றடையக் கூடாது.

வங்காளதேச அதிகாரிகள் அங்குள்ள ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹெபாசாத்-இ-இஸ்லாம் போன்ற தீவிர மதவாத குழுக்களுடன் தொடர்புகள் வைத்துள்ளனர். இந்த தொடர்புகள் அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இவர்களின் சித்தாந்தங்கள் அமெரிக்க மண்ணில் வேரூன்றுவதைத் தடுக்க விசா கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வங்காளதேசத்தின் ஆடை ஏற்றுமதிகள் அமெரிக்க சந்தைகளையே பெரிதும் நம்பி இருக்கின்றன. இதற்கான வரிகளை அதிகரிப்பதன் மூலம், டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து, அமெரிக்க வர்த்தகத்தில் இருந்து நமது தொழிலாளர்கள் பயனடைவதை உறுதி செய்ய முடியும். வங்காளதேசத்துடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை, அமெரிக்க நலன்களுடன் ஒத்துப்போகும் வரை நிறுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறி உள்ளார்.

அமெரிக்கா முழுவதும் உள்ள இந்து கோவில்களின் பிரதிநிதி தேஜல் ஷா கூறுகையில், "வங்காளதேசத்தில் கிருஷ்ண தாஸ் பிரபுவை சிறையில் அடைத்ததையும், வங்காளதேசத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்து கோவில்களை சேதப்படுத்துவதையும் அழித்ததையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்.

இதற்கிடையே 'வங்காளதேசத்தை புறக்கணிப்போம்', 'பயங்கரவாத தாக்குதல்' ஆகிய ஹேஷ்டேக்குகள் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகிவருகின்றன. இந்த ஹேஷ்டேக்குடன், வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை, இந்துக்கள் மீதான தாக்குதல்கள், இந்திய தேசியக் கொடி அவமதிப்பு போன்ற பல தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை பயனர்கள் பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

மேலும் செய்திகள்