< Back
உலக செய்திகள்
இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் பலி

கோப்புப்படம்

உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் பலி

தினத்தந்தி
|
24 Oct 2024 8:06 AM IST

ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்படும் ஹஷேம் சபிதீனின் மரணத்தை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

பெய்ரூட்,

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த மாதம் 27-ம் தேதி கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவரும், நஸ்ரல்லாவின் உறவினருமான ஹசீம் சபிதீன் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் அடுத்த தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் கொண்ட, ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவரை மூன்று வாரங்களுக்கு முன் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக ஹிஸ்புல்லா அமைப்பு எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் ஹசீம் சபிதீன் உயிரிழந்துவிட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. பெய்ரூட்டின் விமான நிலையத்திற்கு அருகில் கடந்த 4-ம் தேதி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் பிறகு, ஹசீம் சபிதீன் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்று ஹிஸ்புல்லா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹிஸ்புல்லா, லெபனானில் அதிகாரம் செலுத்தும் ராணுவ, அரசியல் மற்றும் சமூக அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பு என்று இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்