< Back
உலக செய்திகள்
ஸ்பெயினில் கனமழை: வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 213ஆக உயர்வு
உலக செய்திகள்

ஸ்பெயினில் கனமழை: வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 213ஆக உயர்வு

தினத்தந்தி
|
3 Nov 2024 6:24 AM IST

ஸ்பெயினில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213ஆக உயர்ந்துள்ளது.

மாட்ரிட்,

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் கொட்டித்தீர்த்தது. அந்நாட்டின் கஸ்டிலா லா மஞ்சா, அண்டலுசியா ஆகிய நகரங்களிலும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. வெள்ள நீருடன் சேறும் வீடுகளை சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும், ஏராளமான சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.

எனவே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்கள் மற்றும் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே வெள்ளப்பெருக்கில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தற்போது பலர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்