வரலாறு காணாத வெள்ளத்திற்கு பிறகு ஸ்பெயினில் மீண்டும் கனமழை எச்சரிக்கை
|வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் இயல்புநிலை திரும்பாத, மீண்டும் ஸ்பெயினில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாட்ரிட்,
ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த மாத இறுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஸ்பெயில் உள்ள போரியோடேலா டோரெ மற்றும் வேலன்சியா உள்ளிட்ட நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 5 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளப்பெருக்கின்போது பொதுமக்கள் பலர் தங்கள் வீட்டுக் கூரைகளின் மீது ஏறியும், மரங்களைக் கட்டி அணைத்தும் உயிர் தப்பி உள்ளனர். கடும் வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் கிடைக்காமலும் ஏராளமானோர் அவதியடைந்தனர். இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடு, உடைமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட இந்த வெள்ள பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து துறை மந்திரி ஆஸ்கார் புவென்ட்டே தெரிவித்தார்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 2 வாரங்கள் ஆன பிறகும், பாதிக்கப்பட்ட பல இடங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த நிலையில், மீண்டும் ஸ்பெய்னில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு டராகோனா மற்றும் தெற்கு மலாகா மாகாணங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி 12 மணி நேரத்தில் 180 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.
நாளைய தினம் தெற்கு கிரனடா மற்றும் வேலன்சியாவின் கடற்கரை பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டராகோனா, பார்சிலோனா மற்றும் முர்சியா ஆகிய பகுதிகளில் மணிக்கு 119 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, மலாகா பகுதியில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.