< Back
உலக செய்திகள்
நிஜ்ஜார் படுகொலையில் எனக்கு எந்த பங்கும் இல்லை:  சஞ்சய் வர்மா பேட்டி
உலக செய்திகள்

நிஜ்ஜார் படுகொலையில் எனக்கு எந்த பங்கும் இல்லை: சஞ்சய் வர்மா பேட்டி

தினத்தந்தி
|
21 Oct 2024 8:03 AM IST

நிஜ்ஜார் படுகொலை விசயத்தில் கனடாவால் எந்த விவரமும் இந்தியாவிடம் பகிரப்படவில்லை. இந்த விவகாரம் முழுவதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று சஞ்சய் வர்மா பேட்டியில் கூறியுள்ளார்.

ஒட்டாவா,

காலிஸ்தானிய பயங்கரவாதி என இந்தியாவால் அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார் படுகொலை விவகாரத்தில் கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையே மோதல் முற்றியது. இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்பை முன்னிட்டு கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா உள்பட 6 பேரை திரும்ப பெறுகிறோம் என இந்தியா அறிவித்தது. இந்த சூழலில், தூதர்கள் 6 பேரையும் கனடா வெளியேற்றியது.

இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்துள்ளது. இதன்படி, ஸ்டூவர்ட் ராஸ் வீலர், பேட்ரிக் ஹெபர்ட், மேரி கேத்தரின் ஜாலி, இயான் ராஸ் டேவிட் டிரைட்ஸ், ஆடம் ஜேம்ஸ் சுப்கா, பவுலா ஆர்ஜுவலா உள்ளிட்ட 6 பேரையும் வெளியேறும்படி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கின்றது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் மோதல் போக்கு தீவிரமடைந்து உள்ளது.

இந்நிலையில், கனடா நாட்டை சேர்ந்த சி.டி.வி. நியூஸ் என்ற செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த கனடாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சஞ்சய் வர்மா, இந்த விசயத்தில் எந்த விவரமும் கனடாவால் இந்தியாவிடம் பகிரப்படவில்லை. இந்த விவகாரம் முழுவதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார்.

கனடாவின் வெளியுறவு மந்திரி மெலனி ஜாய் கூறும் விசயங்களில் உறுதியான சான்று என்னவென்று நான் பார்க்க இருக்கிறேன். என்னை பற்றி கூறும்போது, அரசியல் உள்நோக்கோடு அவர் பேசுகிறார் என்று குற்றச்சாட்டாக கூறினார்.

நிஜ்ஜார் உள்பட காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை சேகரிக்கும்படி நான், தனிநபர்களுக்கு உத்தரவிடவோ அல்லது அவர்களை கட்டாயப்படுத்தவோ இல்லை என கூறி கனடாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்தியாவின் ஒரு தூதராக இதுபோன்ற செயல்களை நான் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

நிஜ்ஜார் படுகொலை பற்றி குறிப்பிட்ட சஞ்சய் வர்மா, எந்தவொரு படுகொலையும் தவறானது. மோசம் வாய்ந்தது. இதனை நானும் கண்டிக்கிறேன். அது உலகின் எந்த பகுதியிலும் நடக்க கூடாது என்றார்.

மேலும் செய்திகள்