கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் - 7 பேர் பலி, 150 பேர் கடத்தல்
|கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் 150 பேரை கடத்தி சென்றனர்.
அபுஜா,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் 'பண்டிட்ஸ்' என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நைஜீரியாவின் நைஜர் மாகாணம் முன்யா நகரில் உள்ள கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்தனர். கிராமத்தில் இருந்த உணவு பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த பயங்கரவாத கும்பல் தடுக்க முயன்ற கிராமத்தினர் 3 பேர், அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் 4 பேர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.
பின்னர், கிராம மக்கள் 150 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். இதையடுத்து, அந்த கிராமத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் கடத்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.