நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெர்மனி அதிபர் தோல்வி: பிப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல்
|நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் தோல்வியடைந்தார்.
பெர்லின்,
ஐரோப்பிய யூனியனில் அதிக மக்கள் தொகை கொண்ட உறுப்பு நாடும், மிகப்பெரிய பொருளாதார தேசமுமாக விளங்குவது ஜெர்மனி. அங்கு பொருளாதாரம் தேக்கமடைந்த நிலையில், கடந்த நவம்பரில் தனது நிதி அமைச்சரை அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் பதவி நீக்கம் செய்தார். இது சர்ச்சையானது. கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றன. இதையடுத்து ஆளுங்கட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் தோல்வியடைந்தார். 733 இடங்களைக் கொண்ட கீழ்சபையில் (பன்டேஸ்டாக்) 207 உறுப்பினர்களின் ஆதரவை ஸ்கால்ஸ் பெற்று தோல்வியை சந்தித்தார். அதேநேரத்தில் 394 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர், 116 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர். இதனால் அவர் வெற்றி பெற தேவையான 367 பெரும்பான்மையை விட மிகக் குறைவாகவே பெற்றிருந்தார்.
இது அடுத்த வருடம் (2025) பிப்ரவரி மாத இறுதியில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு வழிவகுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.