காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் பலி
|ஹமாஸ் தளபதிகள் மற்றும் அந்த அமைப்பினரின் பதுங்கு குழியாக அந்த பள்ளி பயன்படுத்தப்பட்டு வந்தது என இஸ்ரேல் கூறியுள்ளது.
காசா,
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர்.
அந்த நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களில் ஒரு சிலரை இஸ்ரேல் மீட்டது.
எனினும், போரானது தொடர்ந்து வருகிறது. காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், காசாவில் உள்ள ஷெஜையா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த பள்ளி மீது இஸ்ரேல் படையினர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அந்த பள்ளியில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனியர்கள் 15 பேர் பலியானார்கள். 29 பேர் காயமடைந்தனர்.
காசா முனையின் பல்வேறு பகுதிகளிலும் போர் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பற்றி இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, அந்த பள்ளியின் வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பினரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹமாஸ் தளபதிகள் மற்றும் அந்த அமைப்பினரின் பதுங்கு குழியாக அந்த பள்ளி பயன்படுத்தப்பட்டு வந்தது என இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்பு, பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கண்காணிப்பு மற்றும் கூடுதல் உளவு விசயங்கள் மேற்கொள்ளப்பட்டன என இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
பொதுமக்கள் பயன்படுத்தும் உட்கட்டமைப்பு பகுதியில் ஹமாஸ் அமைப்பு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என இஸ்ரேல் கூறியுள்ளது. எனினும், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களை ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.