< Back
உலக செய்திகள்
பிரான்சில் ரெயில் பாதைகளை சேதப்படுத்திய கும்பல்..  ஒலிம்பிக் போட்டிக்கு அச்சுறுத்தலா?
உலக செய்திகள்

பிரான்சில் ரெயில் பாதைகளை சேதப்படுத்திய கும்பல்.. ஒலிம்பிக் போட்டிக்கு அச்சுறுத்தலா?

தினத்தந்தி
|
26 July 2024 8:49 AM GMT

பிரான்சின் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ரெயில் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தேசிய ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரீஸ்:

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இன்று ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்க உள்ளது. இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பாரிஸ் வந்து சேர்ந்துள்ளனர். இன்றைய துவக்க விழா நிகழ்வு மற்றும் போட்டிகளை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், பிரான்சின் பல்வேறு பகுதிகளில் அதிவிரைவு ரெயில்கள் செல்லும் பாதைகளில் மர்ம நபர்கள் இன்று தாக்குதல் நடத்தி உள்ளனர். தண்டவாளத்தை சேதப்படுத்துதல், தீவைத்தல் போன்ற சம்பவங்களால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சின் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ரெயில் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தேசிய ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு நடந்த இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும், தொடக்க விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக பயணத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஒருங்கிணைந்த நாசவேலையில் ஈடுபட்டிருப்பதாகவும் சில அதிகாரிகள் கூறி உள்ளனர். எனினும், இந்த தாக்குதல்களுக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கும் தொடர்பு இருப்பதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi

மேலும் செய்திகள்