அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி
|அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரீசுக்காக பில் கிளிண்டன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் (வயது 78). இவர் கடந்த 1993ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை 2 முறை அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். இவர் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
தற்போது பில் கிளிண்டன் குடும்பத்துடன் வாஷிங்டன்னில் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து வாஷிங்டன்னில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பில் கிளிண்டனின் பணியாளர்களின் துணைத் தலைவர் ஏஞ்சல் யுரேனா கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
பில் கிளின்டன் காய்ச்சல் காரணமாக மெட்ஸ்டார் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரீஸ்க்காக பில் கிளிண்டன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.