ஊழல் வழக்கில் இருந்து வங்காளதேச முன்னாள் பிரதமர் விடுதலை
|ஊழல் வழக்கில் இருந்து வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
டாக்கா,
வங்காளதேசத்தின் பிரதமராக கலிதா ஜியா கடந்த 1991 முதல் 1996 வரையிலும், அதன் பிறகு 2001 முதல் 2006 வரையிலும் பதவி வகித்தார். இவர் தனது பதவி காலத்தின்போது 'ஜியா அறக்கட்டளை' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணம் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கலிதா ஜியா உள்பட 4 பேர் மீது 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு டாக்கா கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் அந்த தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. இதற்கிடையில், 'ஜியா ஆதரவற்றோர் இல்ல அறக்கட்டளை' என்ற தொண்டு நிறுவனம் மூலம் மோசடி செய்ததாக கூறி, மற்றொரு வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 776 நாட்கள் சிறையில் இருந்த கலிதா ஜியா, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் 2020-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகி ஆட்சி மாற்றம் நடந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 6-ந்தேதி முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசு கலிதா ஜியாவை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே டாக்கா கோர்ட்டு பிறப்பித்த 7 ஆண்டு சிறை உத்தரவு தொடர்பாக கலிதா ஜியா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஊழல் வழக்கில் இருந்து கலிதா ஜியாவை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.