நெதர்லாந்தில் திடீரென வெடித்து சிதறிய குடியிருப்பு கட்டிடம்.. 5 பேர் பலி
|விபத்தா அல்லது வெடிகுண்டு தாக்குதலா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
தி ஹேக்:
நெதர்லாந்தின் தி ஹேக் நகரின் மரியாஹோவ் பகுதியில் நேற்று காலையில் வெடிகுண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பதறியடித்து வெளியில் வந்து பார்த்தபோது ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர்.
இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர சேவை மீட்புக்குழுவினர் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதிய நிலவரப்படி 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.
இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனர். 2 நாட்கள் ஆன நிலையில் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு குறைவு என்று நகர மேயர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது விபத்தா அல்லது வெடிகுண்டு தாக்குதலா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவம் நடந்தபோது அந்த பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்ற கார் மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படுகிறது.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் டிக் ஸ்கூப் மற்றும் அரச குடும்பம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.