< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆஸ்திரேலியாவில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு
|6 Jan 2025 4:15 AM IST
விமானத்தில் டயர்கள் வெடித்ததை கண்டறிந்து விமானிகள் உடனடியாக விமானத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு நேற்று எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் 289 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்தின் 2 டயர்கள் திடீரென வெடித்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து விமானிகள் விமானத்தை உடனடியாக நிறுத்தினர். அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த அவசர கால மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர். அவர்கள் விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். விமானத்தில் டயர்கள் வெடித்ததை கண்டறிந்து விமானிகள் உடனடியாக விமானத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 289 பயணிகளும் உயிர் தப்பினர்.