எக்ஸ் சமூக ஊடகத்தில் எலான் மஸ்க்கின் பெயர், புகைப்படம் மாற்றம்
|எக்ஸ் (முன்பு டுவிட்டர்) சமூக ஊடகத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மாற்றியுள்ளார்.
நியூயார்க்,
உலக பணக்காரர்களில் ஒருவர் மற்றும் எக்ஸ் (முன்பு டுவிட்டர்) சமூக ஊடகத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயரை கெகியஸ் மேக்சிமஸ் என பெயர் மாற்றம் செய்து உள்ளார். அவருடைய இந்த திடீர் மாற்றம், அவரை பின்பற்றக்கூடிய கோடிக்கணக்கானோரிடையே கவனம் பெற்றுள்ளது.
இதேபோன்று, அதில் உள்ள புகைப்படமும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, பெப் தி பிராக் என்ற தவளையின் படம் இடம் பெற்று உள்ளது. தங்க கவசம் அணிந்து, வீடியோ கேம் விளையாடும் சாதனம் ஒன்றை கையில் பிடித்தபடி அந்த தவளை காணப்படுகிறது.
இந்த தவளை பற்றிய புகைப்படம் பல ஆண்டுகளாக ஆன்லைனில் டிரெண்டிங்கில் உள்ளது. நகைச்சுவை மற்றும் கிண்டல் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் வகையில் அனைத்து வகையிலான பதிவுகளிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று, கெகியஸ் மேக்சிமஸ் என்ற பெயர் கிரிப்டோ கரன்சியுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. மஸ்கின் முகப்பு பெயர் மாற்றத்திற்கும், கிரிப்டோ கரன்சிக்கும் உள்ள தொடர்பு பற்றி தெளிவாக தெரிய வரவில்லை. எனினும், ஒரு பதிவில் மஸ்க், கெகியஸ் மேக்சிமஸ் விரைவில் 80 என்ற அளவை எட்டும் என்று தெரிவித்து உள்ளார். இதனால், கிரிப்டோ கரன்சியை அவர் வரவேற்கிறார் என்றும் கூறப்படுகிறது.