
எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்; பின்னணியில் உக்ரைன்? - எலான் மஸ்க் குற்றச்சாட்டு

எக்ஸ் தளம் மீதான சைபர் தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் உள்ளதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாஷிங்டன்,
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் சமூக வலைதளம் (டுவிட்டர்) நேற்று உலக அளவில் முடங்கியது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் எக்ஸ் தளம் முடங்கியதால் பயனாளர்கள் அவதியடைந்தனர். சுமார் 1 மணிநேர முடக்கத்திற்குப்பின் 4 மணியளவில் எக்ஸ் தளம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இது சைபர் தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், எக்ஸ் தளம் மீதான சைபர் தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் உள்ளதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு வழங்கிவந்த ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உக்ரைன், அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசியில் முக்கிய பொறுப்பில் எலான் மஸ்க் உள்ளார். தற்போது எலான் மஸ்கின் எக்ஸ் தளம் முடக்கப்பட்ட நிலையில் இதற்கு உக்ரைன் தான் காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.