கருத்து கணிப்பு பொய்யானது: மாறிய காட்சிகள் - தொடர் முன்னிலையில் டிரம்ப்
|ஜனாதிபதி தேர்தலை ஒட்டி வெளியான கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களாக ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் களம் இறங்கினர். பல கட்சி வேட்பாளர்கள் போட்டியில் இருந்தாலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக கமலா ஹாரிஸ்-டிரம்ப் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. எலெக்ட்ரோல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். அமெரிக்காவில் 16 கோடியே 50 பேர், வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள். இதில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். அவர்கள் தபால் மூலமும், இ-மெயில் மூலமும் வாக்களித்து இருந்தனர்.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று தொடங்கியது. வாக்களிக்கும் மையங்களுக்கு மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். அங்கு வாக்குச்சீட்டு முறை இருப்பதால், வாக்காளர்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அந்த சீட்டை ஓட்டுப்பெட்டியில் போட்டனர். விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு இன்று காலை நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக இருந்த நிலையில், தற்போது அவை அனைத்தும் பொய்யாகி, டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
இதன்படி 240க்கும் மேற்பட்ட எலெக்ட்ரோல் வாக்குகளுடன் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். கலிபோர்னியா, விர்ஜினியா நியூ மெக்சிகோ, நியூயார்க் போன்ற மாகாணங்களில் கலமா ஹாரிஸ் வெற்றிப் பெற்றுள்ளார். அவர் 210 எலெக்ட்ரோல் வாக்குகளைபபெற்றுள்ளார்.
தற்போது வரை அதிக இடங்களில் டிரம்ப் முன்னிலை வகித்து வரும் நிலையில், அவர்தான் அடுத்த ஜனாதிபதியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக வெளியாகி இருந்த கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ்தான் வெற்றிப் பெறுவார் என கூறப்பட்ட நிலையில் அவை அனைத்தும் பொய்யாகி உள்ளன. இன்று மாலையே அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார் என்பது தெரியவரும்.