< Back
உலக செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதி; இதுவரை 6.8 கோடி வாக்குகள் பதிவு

Image Courtesy : AFP

உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதி; இதுவரை 6.8 கோடி வாக்குகள் பதிவு

தினத்தந்தி
|
3 Nov 2024 4:43 PM IST

அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதியை பயன்படுத்தி இதுவரை 6.8 கோடி அமெரிக்கர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் (60) களமிறங்கி உள்ளார்.

இந்தியாவை பொருத்தவரையில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மற்றபடி பொதுமக்கள் அனைவரும் தேர்தல் கமிஷன் அறிவித்த நாளிலேயே வாக்களிக்க முடியும். ஆனால் அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.

வேலை, உடல்நல பிரச்சினைகள் அல்லது பயணம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் நாளில் வாக்களிப்பதில் சிரமத்தை எதிர்கொள்பவர்களுக்கு இந்த நடைமுறை பயனுள்ளதாக அமைகிறது. அத்துடன், அதிக அளவில் வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதையும் உறுதி செய்கிறது. இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின்போதும் முன்கூட்டியே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களிப்பார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத மக்கள் தபால் மூலம் வாக்களிக்கின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 6.8 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்யும் வசதிக்கு அமெரிக்க மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இது குறித்து நியூயார்க் நகரைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் கூறுகையில், "இந்த வசதி மிகவும் வரவேற்கத்தக்கது. நவம்பர் 5-ந்தேதி எனது வாக்கை என்னால் செலுத்த முடியாமல் போய்விட்டால், என்னுடைய வாக்கு வீணாகிவிடும். அமெரிக்காவுக்கு இது ஒரு முக்கியமான நேரம். எங்களை வழிநடத்த வேண்டிய நபருக்கு நாங்கள் வாக்களிக்காமல் இருக்க முடியாது" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்