சீனாவுக்கான அமெரிக்க தூதராக டேவிட் பெர்டியூ நியமனம்: டிரம்ப் அறிவிப்பு
|சீனாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் செனட் உறுப்பினர் டேவிட் பெர்டியூவை டிரம்ப் நியமித்து உள்ளார்.
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவில் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை அவர் நியமித்து வருகிறார். இதன்படி, அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாண முன்னாள் செனட் உறுப்பினரான டேவிட் பெர்டியூவை, சீனாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் நியமித்து உள்ளார்.
இதுபற்றி டிரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவில், பார்ச்சூன் 500-ன் தலைமை செயல் அதிகாரி, 40 வருடம் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டவர், அமெரிக்க செனட்டராக பணியாற்றியவர் டேவிட். சீனாவுடனான நம்முடைய உறவை கட்டியெழுப்ப மதிப்புமிக்க நிபுணத்துவத்துடன் செயல்படுவார்.
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் வசித்திருக்கிறார். தொழிலின் பெரும் பகுதியாக ஆசியா மற்றும் சீனாவில் அவர் பணியாற்றி இருக்கிறார் என தெரிவித்து உள்ளார். சீன தலைவர்களுடன் ஆக்கப்பூர்வ செயல்பாட்டுக்கான உறவை ஏற்படுத்தவும், அந்த பகுதியில் அமைதியை பராமரிப்பதற்கான என்னுடைய செயல் திட்டம் அமல்படுத்தப்படவும் துணை புரிவார் என்றும் டிரம்ப் அதில் தெரிவித்து இருக்கிறார்.