< Back
உலக செய்திகள்
இந்தியாவில் டேட்டிங் கலாசாரம் தனித்துவம் வாய்ந்தது... ஆஸ்திரேலிய பெண்மணியின் அனுபவம்
உலக செய்திகள்

இந்தியாவில் டேட்டிங் கலாசாரம் தனித்துவம் வாய்ந்தது... ஆஸ்திரேலிய பெண்மணியின் அனுபவம்

தினத்தந்தி
|
15 Oct 2024 6:07 AM IST

ஆஸ்திரேலியாவில் டேட்டிங் செல்லும்போது ஆண்கள், கேலி பேச்சிலும், கிண்டல் செய்வதன் வழியேயும் காதல் விளையாட்டில் ஈடுபடுவார்கள் என ஸ்டீலே கூறுகிறார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண் பிரீ ஸ்டீலே. டிஜிட்டல் வடிவில் ஆடியோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர். சமூக ஊடகங்களில் வீடியோக்களையும் வெளியிட்டு வருபவர். 2023-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பயணம் செய்து வருகிறார். இந்தியாவில் காணப்படும் டேட்டிங் கலாசாரம், அதுபற்றிய தன்னுடைய கவனிப்பு, அனுபவங்கள் மற்றும் எண்ணங்களை ஆவணங்களாக தொகுத்து வருகிறார்.

இதில், சொந்த நாட்டில் உள்ள டேட்டிங் அனுபவத்திற்கும், இந்தியாவில் உள்ள டேட்டிங் கலாசாரத்திற்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன என அவர் கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் டேட்டிங் செல்லும்போது ஆண்கள், கேலி பேச்சிலும், கிண்டல் செய்வதன் வழியேயும் காதல் விளையாட்டில் ஈடுபடுவார்கள். ஆனால், இந்தியாவில் ஒவ்வொருவரும் உங்களுடன் அன்பாக பழகுவார்கள். விசயம் விரைவாக நடந்து விடுகிறது.

நான் ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். என்னுடன் இருந்த நபர் திடீரென டேட்டிங்கின்போது என்னுடைய கையை பிடித்து விட்டார். ஆஸ்திரேலியாவில் இதுபோன்று ஒருபோதும் நடப்பது இல்லை என்றார்.

மும்பையில் டேட்டிங் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அதனை நினைவுகூர்ந்த ஸ்டீலே, அது ஒரு தனித்துவ அனுபவம் என கூறுகிறார். பள்ளியில் நடந்த டிஸ்கோ நிகழ்ச்சி போல் உணர்ந்தேன். முதல் ஒரு மணி நேரம் பெண்கள், மற்ற பெண்களுடனேயே பேசியபடி இருந்தனர். ஆண்களும் அதனையே செய்தனர். யாரும் மற்ற பாலினத்தவருடன் கலந்து பேசவில்லை.

இந்தியாவில் டேட்டிங் என்பது இன்னும் புதுமையான விசயம் போல் உள்ளது என்கிறார். இந்தியாவில், பாலிவுட் படங்களை பார்த்து பலரும் அதுபோல் நடந்து கொள்கின்றனர் என்ற உணர்வு தருகிறது. ஏனெனில், டேட்டிங் கலாசாரம் இநதியாவில் இல்லை. மேற்கத்திய நாடுகளில் டேட்டிங் பல தலைமுறைகளை கடந்து வந்துள்ளன. பள்ளிகளில் பாலியல் கல்வியும் கூட இருக்கும்.

இந்தியாவில் அப்படி இல்லை என தெரிகிறது. இன்னும் பெருமளவில் பெற்றோர் பார்த்து செய்யும் திருமணங்களே நடக்கின்றன. அதனால், திரைப்படத்தில் பார்க்க கூடிய விசயங்களை கொண்டு தங்களுடைய டேட்டிங் விசயங்களை அவர்கள் வடிவமைக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் டேட்டிங் மெதுவாக நடைபெறும். 10 மாதங்கள் வரை மக்கள் டேட்டிங்கில் ஈடுபடுவார்கள். இந்தியாவிலோ முற்றிலும் வேறுபட்டு உள்ளது.

நான் பார்த்தவரையில் இந்தியாவில் டேட்டிங் கலாசாரம் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது என்றார். இந்தியாவில் டேட்டிங் பற்றிய அவருடைய அனுபவம் முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. அதனாலேயே அது பரவசமூட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்