நுண்ணுயிர்கள் அழிவு, அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை - சத்குரு பேச்சு
|நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன என்று சத்குரு கூறியுள்ளார்.
பகு,
ஐ.நா., சபை சார்பில், சி.ஓ.பி., 29 எனப்படும் பருவநிலை உச்சி மாநாடு, அசர்பைஜான் நாட்டில், கடந்த 11ம் தேதி துவங்கியது. இதில் உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இம்மாநாட்டில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்று பேசியதாவது:-
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இந்த பூமியின் ஆரோக்கியம் என்பது மனிதர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களும் உயிர்ப்போடு இருப்பதில்தான் இருக்கிறது. நுண்ணுயிர், பூச்சி, புழு மற்ற அனைத்து சிறிய உயிர்களும் வலிமையாக வாழவில்லை என்றால், நாம் வலிமையாக வாழ முடியாது. பூமியில் உள்ள உயிரினங்களில் 60% மேலாக மண்ணுக்கு அடியில் உள்ளன. மேலும் 95% சதவிகித உயிர்கள் மண் மேல் செழித்து வளர்கின்றன.
நீண்ட காலமாக நிலம், பசுமை போர்வையின்றி தரிசாக விடப்படுவதால், அதிகமான உயிரினங்கள், குறிப்பாக நுண்ணுயிர்கள் அழிந்து போகின்றன. இந்தப் போக்கு, பூமியை அழித்துவிடும். நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. இது, மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை. மண் அழிவு என்பது மிகத் தீவிரமான பிரச்சினை. ஆனால், இதை பற்றி யாரும் பேசுவதில்லை. சரியான மாற்று வழிகள் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அழிந்து வரும் மண் வளத்தினை மேம்படுத்துவதற்காக மண் காப்போம் என்ற உலகளாவிய இயக்கத்தை சத்குரு 2022-ஆம் ஆண்டு துவக்கினார். உலகளவில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்வேறு நாட்டு அரசாங்கங்களை செயல்பட வலியுறுத்தியும் 30,000 கி.மீ பயணம் மேற்கொண்டார். இவ்வியக்கத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அந்தந்த நாடுகளின் மண் வளத்தை மேம்படுத்துவதற்கான பிரத்யேக பரிந்துரைகள் வழங்கப்பட்டன.