< Back
உலக செய்திகள்
வேலையை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி... ஊழியரை இருட்டு அறையில் பூட்டி வைத்த நிறுவனம்

கோப்புப்படம்

உலக செய்திகள்

வேலையை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி... ஊழியரை இருட்டு அறையில் பூட்டி வைத்த நிறுவனம்

தினத்தந்தி
|
14 July 2024 1:49 PM IST

மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஊழியரை சித்ரவதை செய்ததற்காக ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.

பீஜிங்,

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் குவாங்சோ டுயோய் நெட்வொர்க் என்கிற வீடியோ கேம் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் லியு லின்சு என்பவர் கேம் ஆர்ட் எடிட்டராக பணியாற்றி வந்தார். லியுவின் தனிப்பட்ட செயல்களால் அதிருப்தி அடைந்த நிறுவனம் அவரை தாமாக முன்வந்து வேலையை ராஜினாமா செய்யுமாறு கேட்டுள்ளது. ஆனால் லியு அதை மறுத்துவிட்டார்.

இதையடுத்து நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் லியுவை நிறுவனத்தில் உள்ள தனி இருட்டு அறையில் பூட்டி வைத்ததுடன் அவரது செல்போனையும் பறித்தனர். தொடர்ந்து 4 நாட்கள் அவரை அந்த இருட்டு அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்தனர்.

இதனிடையே தனது கணவரை காணவில்லை என லியுவின் மனைவி போலீசரில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. நிலைமை கைமீறி போனதையடுத்து, அந்த நிறுவனம் லியுவை அதிகாரப்பூர்வமாக பணிநீக்கம் செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தது. வேலைநேரத்தில் நிறுவனத்தின் கொள்கைகளை மீறி பல்வேறு மோசமான இணையதளங்களை பார்ப்பதாக லியு மீது நிறுவனம் குற்றம் சாட்டியது.

இதனிடையே இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது தொடர்பாக நிறுவனத்தின் மீது லியு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு தொழிலாளர் ஒப்பந்த சட்டங்களை மீறி இருட்டு அறையில் அடைத்து வைத்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்ததற்காக லியுவுக்கு ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்