
சீனாவில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் கொடூரமான கொலைகளில் தொடர்புடைய 2 குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பீஜிங்:
சீனாவின் ஜுகாய் நகரில் கடந்த ஆண்டு பொதுமக்கள் மீது காரை ஏற்றியதில் 35 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஸ்டேடியத்திற்கு வெளியே மக்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக பேன் வெய்கியூ (வயது 62) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
அவர், தனது மனைவியை விவாகரத்து செய்தபின் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் ஆத்திரத்தில் பொதுமக்களை கொடூரமாக கொன்றது விசாரணையில் தெரியவந்தது. அவர் மீதான வழக்கை விசாரித்த கோர்ட்டு, சமீபத்தில் மரண தண்டனை விதித்தது.
இதேபோல், ஜியாங்சு மாகாணம் வூக்சி நகரில் உள்ள ஒரு பள்ளியில் 8 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த சூ ஜியாஜின் என்ற நபருக்கு கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இருவரின் மரண தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து, பேன் வெய்கியூ, சூ ஜியாஜின் ஆகியோருக்கான மரண தண்டனையை அந்தந்த பகுதி அதிகாரிகள் இன்று நிறைவேற்றினர்.