< Back
உலக செய்திகள்
சீனா:  வணிக வளாக தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு
உலக செய்திகள்

சீனா: வணிக வளாக தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

தினத்தந்தி
|
18 July 2024 1:33 PM IST

சீனாவில் மாகாண அரசாங்கங்கள் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தும்படி அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டபோதும் தீ விபத்துகள் தொடர்ந்து வருகின்றன.

பீஜிங்,

சீனாவின் மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் ஜிங்காங் நகரில் வணிக வளாகம் ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால பணியாளர்கள் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்டோர் சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பலர் சிக்கி கொண்டனர். தீ விபத்தில் கரும்புகை வான்வரை பரவியது. இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.

அவர்களில் 30 பேர் முதல்கட்ட நடவடிக்கையில், பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். எனினும், மொத்தம் எத்தனை பேர் உள்ளே சிக்கியிருந்தனர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது.

தீ விபத்தில் மொத்தம் 75 பேர் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர் என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது.

இதுபற்றிய முதல்கட்ட விசாரணையின்படி, கட்டுமான பணியால் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

சீனாவில் மாகாண அரசாங்கங்கள் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தும்படி அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டபோதும் தொடர்ந்து, இதுபோன்ற பெரிய அளவிலான தீ விபத்துகள் நடந்து வருகின்றன.

சீனாவில், போதிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் மற்றும் சட்ட விதிகளை மக்கள் கடைப்பிடிக்காத நிலையில், அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

கடந்த ஜனவரியில், தென்கிழக்கு சீனாவில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

இதற்கு சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த ஹெனான் மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்