டெய்லர் ஸ்விப்ட் கச்சேரியில் நடனம் ஆடிய கனடா பிரதமர்... வீடியோவை பார்த்து கொந்தளித்த மக்கள்
|பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும் கொடுங்கோல் மன்னன் நீரோவையும் ஒப்பிட்டு சிலர் விமர்சனம் செய்தனர்.
டொரன்டோ:
கனடாவின் மான்ட்ரியல் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீவைப்பு மற்றும் உருவ பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்களும் நடந்தன.
இவ்வாறு நாட்டின் ஒரு பகுதியில் வன்முறை நிகழ்ந்து கொண்டிருந்தபோது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்னொரு பகுதியில் பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் கச்சேரியில் பங்கேற்று இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இந்த இசை நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் நடனமாடியது தொடர்பான வீடியோ மற்றும் மக்களுக்கு நட்பு பிரேஸ்லெட் வழங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மான்ட்ரியல் நகரில் பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொறுப்பின்றி நடந்துகொள்வதாக மக்கள் கொந்தளித்தனர். சிலர் ட்ரூடோவையும் கொடுங்கோல் மன்னன் நீரோவையும் ஒப்பிட்டு விமர்சனம் செய்தனர்.
'பழங்காலத்தில் ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் மேடையில் ஏறி கவிதை வாசித்தான். அதேபோன்று கனடாவின் கடனை 1.2 டிரில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்கிவிட்டு, நாட்டின் எல்லைகளை திறந்து விடுவதன் மூலம் வீட்டுவசதி நெருக்கடியை உருவாக்கிய பிறகு இன்றிரவு டெய்லர் ஸ்விப்ட் கச்சேரியில் பிரதமர் ட்ரூடோ நடனமாடுகிறார்' என ஒரு பயனர் விமர்சனம் செய்திருந்தார்.
சிலர் ட்டூரோவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர். ட்ரூடோ ஒரு தந்தையாக தன் மகளுடன் கச்சேரியில் இருக்கிறார், தவறாக எதுவும் நடக்கவில்லை என ஒரு பயனர் கூறியிருந்தார்.