கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுகிறார்
|கட்சியின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தலைவர் பதவியில் ட்ரூடோ இருந்து விலகலாம் என தெரிகிறது.
டொரன்டோ:
கனடாவில் உள்நாட்டு அரசியல் சிக்கல்கள், பொருளாதார சவால்கள் மற்றும் வெளிநாட்டு உறவுகளை கையாளும் விதம் போன்ற காரணங்களால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அவர் விரைவில் ராஜினாமாவை அறிவிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
நாளை மறுநாள் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கட்சியின் தலைவர் பதவியில் ட்ரூடோ இருந்து விலகலாம் என தெரிகிறது. கட்சியின் கூட்டத்தில் இடைக்கால பிரதமர் யார் என்பது அறிவிக்கப்படும்.
இதுதவிர, ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தை ஆதரித்து வந்த முக்கிய கூட்டணிக்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது. மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது வரும் ஜனவரி மாதம் 27-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்திருந்தார். அத்துடன், 2 இடைத்தேர்தல்களில் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது. இதுவும் ட்ரூடோவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு அக்டோபரில் கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.