எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பிரேசில் அதிபரின் மனைவி; வைரலான வீடியோ
|பிரேசிலில், போலியான செய்திகள் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில், நடப்பு ஆண்டில் ஒரு மாதத்திற்கு எக்ஸ் சமூக வலைதளம் சஸ்பெண்டு செய்யப்பட்டது.
ரியோ டி ஜெனீரோ,
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரில் நாளையும், நாளை மறுதினமும் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த சூழலில், பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி20 உச்சி மாநாட்டுக்கான குழு விவாதம் நேற்று நடந்தது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள், உயரதிகாரிகள், ஊடக துறையினர் பங்கேற்றிருந்தனர்.
இதில் கூட்டத்தினர் முன் பேசிய பிரேசில் அதிபரின் மனைவி ஜன்ஜா டி சில்வா, எக்ஸ் சமூக வலைதள உரிமையாளரான எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் கடுமையாக திட்டினார். அப்போது, கூடியிருந்தவர்களில் சிலர் அதனை வரவேற்று கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது.
பிரேசிலில், எக்ஸ் சமூக வலைதளம் வழியே போலியான செய்திகள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் செய்திகள் பரப்பப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த கணக்குகளை முடக்கும்படி, கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேபோன்று, பிரேசில் நாட்டுக்கு என தனியாக ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படியும் அந்நிறுவனத்திடம் கேட்டு கொள்ளப்பட்டது.
இதனை எலான் மஸ்க் கவனத்தில் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அவர் அலட்சியம் செய்ததன் தொடர்ச்சியாக, பிரேசிலில், நடப்பு ஆண்டில் ஒரு மாதத்திற்கு எக்ஸ் சமூக வலைதளம் சஸ்பெண்டு செய்யப்பட்டது. இதனால், பிரேசில் அரசுக்கும், மஸ்கிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த சூழலில் மஸ்க்கை, ஜன்ஜா டி சில்வா கடுமையாக சாடியுள்ளார்.