< Back
உலக செய்திகள்
டிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்ற நபர்களுக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல்... என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
உலக செய்திகள்

டிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்ற நபர்களுக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல்... என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

தினத்தந்தி
|
28 Nov 2024 10:54 AM IST

எலைஸ் ஸ்டெபானிக்கை ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் அறிவித்த நிலையில், அவருடைய வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவில் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை அவர் நியமித்து வருகிறார். அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

இதன்படி, கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, டிரம்ப் அமைச்சரவையில், இடம் பெற்றுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரான, எக்ஸ் (முன்பு டுவிட்டர்) சமூக ஊடகத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் இணைந்து அவர் பணியாற்றுவார் என டிரம்ப் கூறினார்.

இந்த சூழலில், அவருடைய மந்திரி சபையில் இடம்பெற்ற நபர்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தபடி உள்ளது. எலைஸ் ஸ்டெபானிக் என்பவரை ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் அறிவித்த நிலையில், அவருடைய வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது என முதன்முதலாக வெளியே கூறினார். இது மற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர், தன்னுடைய கணவர் மற்றும் 3 வயது மகனுடன் வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து நியூயார்க் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, இந்த மிரட்டல் செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பாதுகாப்பு மந்திரியாக நியமனம் செய்யப்பட்ட பீட் ஹெக்சேத், அவருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது என உறுதிப்படுத்தினார்.

இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், பைப் வெடிகுண்டுக்கான நம்பத்தக்க அச்சுறுத்தல் வந்துள்ளது என கூறி வீட்டுக்கு நேற்று காலை போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து கூறினார். அப்போது, வீட்டில் என்னுடைய 7 குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தனர் என தெரிவித்து உள்ளார்.

இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். டிரம்ப் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து பணியாற்றும்படி கேட்டு கொண்டார். அதனை நான் மேற்கொள்ள உள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கழகத்தின் நிர்வாகியாக டிரம்ப் நியமித்துள்ள லீ ஜெல்டின் என்பவரும், பைப் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என உறுதிப்படுத்தி உள்ளார். இதுபற்றி எப்.பி.ஐ. விசாரித்து வருகிறது.

அவர்கள் கூறும்போது, வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டவர்களின் வீடுகளுக்கு உடனடியாக போலீசார் செல்வதற்காக இதுபோன்ற வெடிகுண்டு புரளிக்கான அழைப்புகள் விடப்படுகின்றன என தெரிவித்தனர்.

இதுவரை பாதுகாப்பு, வீட்டு வசதி, விவசாயம் மற்றும் தொழிலாளர் துறை மற்றும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் உள்பட டிரம்ப் தேர்ந்தெடுத்த 9 பேருக்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இதுபற்றி டிரம்பின் குழுவில் உள்ள பெண் செய்தி தொடர்பாளரான கரோலின் லீவிட் கூறும்போது, டிரம்ப் நியமித்தவர்களுக்கு எதிராக, அவர்களின் உயிருக்கும், அவர்களுடன் வசிப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் உடனடியாக செயல்பட்டனர் என கூறியுள்ளார்.

இந்த வாரம் வெடிகுண்டு மிரட்டலுக்கு இலக்கான அனைவரும் அமெரிக்க உளவு துறையால் பாதுகாக்கப்படவில்லை என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், போலீசாருடன் வெள்ளை மாளிகை தொடர்ந்து தொடர்பில் உள்ளது என ஜனாதிபதி பைடன் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

2 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பிய டிரம்புக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் எதுவும் விடப்படவில்லை என போலீஸ் துறையினர் தெரிவித்தனர். ஆனால், டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தினரை கொலை செய்து விடுவேன் என தினந்தோறும் என்ற அடிப்படையில் வீடியோ வெளியிட்ட நபரை அரிசோனா போலீசார் இந்த வாரம் கைது செய்திருந்தனர்.

அடுத்த ஆண்டு ஜனவரியில், ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பு, டிரம்பின் மந்திரி சபையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விடப்பட்டு வருகின்றன. டிரம்ப் நியமித்தவர்களில் பலருக்கும் பைப் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதேபோன்று, பாலஸ்தீன ஆதரவு பெற்ற வாசகங்களும் அந்த மிரட்டலுடன் செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

அதனால் இவை, அந்நிய நாடுகளில் இருந்து செயல்படுத்தப்படுகின்றனவா? என்ற கேள்வியும் ஒருபுறம் எழுகிறது. அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம். சுகாதாரம் நிறைந்த மற்றும் அறிவியல் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவோம் என்ற கோஷத்துடன் டிரம்ப் செயல்பட்டு வரும் சூழலில் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மேலும் செய்திகள்