< Back
உலக செய்திகள்
பிரான்சில் உள்ள ரஷிய தூதரகத்தில் குண்டுவெடிப்பு; பயங்கரவாத தாக்குதலா?
உலக செய்திகள்

பிரான்சில் உள்ள ரஷிய தூதரகத்தில் குண்டுவெடிப்பு; பயங்கரவாத தாக்குதலா?

தினத்தந்தி
|
24 Feb 2025 8:22 PM IST

பிரான்சின் மார்சே நகரில் ரஷிய தூதரகத்தின் மீது நடந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலின் அறிகுறிகளாகும் என ரஷியா தெரிவித்து உள்ளது.

மார்சே,

பிரான்ஸ் நாட்டின் மார்சே நகரில் ரஷிய தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த தூதரகத்தில் திடீரென இன்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதனை தொடர்ந்து, சம்பவ பகுதிக்கு ஏறக்குறைய 30 தீயணைப்பு வீரர்கள் சென்றனர்.

இதுபற்றி டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், தூதரக பூந்தோட்ட பகுதியில் மர்ம நபர்கள் சிலர் 2 குண்டுகளை வீசி சென்றுள்ளனர் என தெரிவித்து உள்ளது. அந்த பகுதியில், கார் ஒன்று நின்றிருந்தது. அது வேறொரு பகுதியில் இருந்து திருடப்பட்து என கூறப்படுகிறது.

எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுபற்றி ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறும்போது, மார்சே நகரில் அமைந்த ரஷிய தூதரகத்தின் மீது நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதலின் அறிகுறிகளாகும்.

இதுபற்றி பிரான்ஸ் உடனடியாக, முழு அளவிலான விசாரணை மேற்கொள்ள வேண்டும். ரஷிய அமைப்புகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என கூறினார்.

கடந்த வாரம் புதன்கிழமை, ரஷியாவின் வெளியுறவு நுண்ணறிவு பிரிவு வெளியிட்ட செய்தியில், ஐரோப்பாவில், குறிப்பிடும்படியாக ஜெர்மனி, பால்டிக் மற்றும் ஸ்கேன்டிநேவியன் நாடுகளில் உள்ள ரஷிய தூதரகங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கான சாத்தியங்கள் பற்றி உக்ரைன் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர் என எச்சரித்து இருந்தது.

இந்நிலையில், பிரான்சில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இதற்கு பின்புலத்தில் இருந்து செயல்பட்டவர்கள் யாரென்ற விவரம் வெளிவரவில்லை. இதுபற்றி பிரான்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது பயங்கரவாத தாக்குதலா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்